Piriyan... Kavingar...
Drag to set position!
பறவையின் பாடல் !
எப்போதும் தொடர்கின்ற சாதனைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் நித்தம் நித்தம் யுத்தம் செய்து பலமுறை வெற்றிகளும் சிலமுறை தோல்விகளும் வெற்றித் தோல்விகளை மாறி மாறி சந்தித்துக்கொண்டிருக்கும்…
அந்த மழைக்கால வேளையில்
போதிமரக்கிளையில் நண்பர்களோடு சேர்ந்து
நினைவுகளை கொத்தித் தின்றபடி கவலையறியா ஒரு ரகசியப் பறவையாய் இசையோடு அமர்ந்திருக்கிறேன் எனக்கேயான பாடல்களை எல்லோருக்குமாய் பாடியபடி…
பிரியன்… திரைப்பட பாடலாசிரியர் பிரியனாக உங்களோடு என்னைப்பற்றி பகிர்ந்துகொள்வது, காதலியின் மடியில் கிடப்பதுபோல சுகமானது…
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருச்சியில்… குழந்தைகள் நிரம்பியிருக்கின்ற வீட்டைப்போல… என்றைக்குமே திகட்டாத ஊர் எனது…
காவிரி ஆற்றங்கரையும், மலைக்கோட்டையும், கல்லனையும், முக்கொம்பும் என்றும் மறக்க முடியாத எனது ரகசியங்களை சேமித்து வைத்திருக்கின்றன…
எனது பள்ளிக்காலங்கள் பிஷப் ஹீபெர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிக்காலங்கள் தேசியக்கல்லூரியிலும் கலந்திருக்கின்றன… திரும்பப் பெறமுடியாத குழந்தையின் முத்தங்கள் அவை…
கவிதைகளுக்கான புதிய பரிமாணங்களையும், பரிணாமங்களையும், அரங்கேற்றங்களையும்… அடிக்கடி எனக்கு பரிசளித்த மேடைகள்… பல பேருக்கு வழக்கம்போல் வழிகாட்டியபடி அங்கேதான் அமைதியாய் அமர்ந்திருக்கின்றன இன்னும் …
ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார்கள் எனது நண்பர்கள்… இளங்கலைப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் எனக்கு வேலை கிடைத்துவிட்டதை… எனது முதல்மாத சம்பளநாள்வரை அவர்களால் நம்பமுடியவில்லை…
உள்ளுக்குள் இருந்த சாதனைப் பசிக்கு சரியான தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்துடன்… சிங்கார சென்னையில் கால்பதித்தேன் விழிகள் முழுக்க கனவுகளுடனும்… அறைகள் முழுக்க கவிதைகளுடனும்…
பூமிக்கடியில் வேர்விட்டுக்கொண்டிருந்த செடி மரமாவதைப்போல நிதானமான வேகத்துடன் தொடங்கியது எனது சென்னைப்பயணம்…
முதுகலைப்படிப்பை தொடர்ந்தபடி, பாடல்களுக்கான பயிற்சிகளில் தெளிந்தவுடன்… பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு பாடலாசிரியனாக உருமாற நேரம் வந்துவிட்டதை உணரமுடிந்தது…
மொழிதெரியாத தேசத்துக்குள் நுழைந்த பாமரனைப்போலத்தான் முதலில் நின்றேன்… திரைப்படத்துறையில் யாரையுமே தெரியாமல்…
தேடல்… மறுக்க முடியாத… மறைக்க முடியாத… தேடல்…
வழிகளும் இனிக்கின்ற தேடல்… வாழ்க்கையின் மறுபுறம் புரியவைத்த தேடல்… விரும்பிய தேடல்… ரசித்த தேடல்… முடிவில்லாத தேடல்…
முதலில் சின்னச்சின்ன மொழிமாற்றுப்படங்கள்… சிறிய ஆல்பங்கள்… விளம்பரங்கள்… மெல்ல மெல்ல சிறு budget படங்கள் என்று குளத்தில் எறிந்த கல்லைப்போல விரியத்தொடங்கியது எனக்கான வட்டம்…
இன்று பல படங்களைத்தாண்டி ‘அஞ்சாதே’ உண்மையான உழைப்பிற்கான,முழுமையான முயற்சிகளுக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது…
இன்னும்… Vijay Antony இசையில், காதலில் விழுந்தேன், எட்டப்பன், AVM-இன் புதுப்படம்…, S.A.சந்திரசேகரின் பந்தயம், ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும் என்று 25 -க்கும் மேற்பட்ட படங்களோடும் 50 -க்கும் மேற்பட்ட பாடல்களோடும் நகர்ந்துகொண்டிருக்கிறது எனது காலநதி…
படத்துறையைப்போலவே விளம்பரதுறையிலும் சென்னை சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் Jewellery Mahal,சென்னை சில்க்ஸ் summer express, ARRS சில்க்ஸ், AVR சொர்ணமகால், Joy Aalukkaas Jewellary, செல்வமாளிகை Jewellary என்று பலக்கிளைநதிகள் இணைந்தவண்ணம் இருக்கின்றன எனது நதியுடன்…
அதேபோல்... சாரல், தீம்திரனா எனப்பல ஆல்பங்களும் கலந்துகொண்டிருக்கின்றன…
எப்படி இருந்தாலும் எனது எழுத்துக்கள்… முகம், பெயர் தெரியாத இதயங்களுக்கும் தருகின்ற சின்னச்சின்ன இன்பங்களுக்காக எழுதிக்கொண்டே இருப்பேன்… நிறைவுடன்…
விரும்பியதை செய்துவிடுகிறபொழுது கிடைக்கிற மகிழ்ச்சி…
பிறந்து சிலநொடிகளேயான குழந்தையை முதல்முறை உச்சிமுகர்ந்து கொஞ்சுவதற்கு இணையானது…
ஒரு படைப்பாளியாக… உயிர்வலியோடு படைப்புகளைப் பிரசவிக்கிற சுகம்… அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போழுதில் இன்னும் அழகாகிவிடுகிறது !
மேலும் மேலும் உயரம் செல்வதற்கான உந்துதலும், உழைப்பும், தன்னம்பிக்கையும், படைப்புகள் மீதான காதலும், கடவுளும், நண்பர்களும் இருக்கும்வரை… எனது வளர்ச்சிகள் நிரந்தரமானது !
எனக்கான நண்பர்களின் கைகள் கோர்த்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்… எனது நண்பர்களோடு இன்னும் நிறைய தூரம் செல்வேன்… சாதிப்பேன்…
நீங்களும் எனக்கான நட்பாகிவிடும்பொழுது… நாமும் நல்ல நண்பர்களாகிவிடும்பொழுது
எனது நாளைய சாதனைகள் இன்றே நிட்சயிக்கப்பட்டுவிடுகின்றன என்பது உண்மை !
இனி நமது பாதைகள் நம்மைத்தேடி வருபவர்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும் நிறைய… அதற்காக கற்றுக்கொள்வோம் நாம் இன்னும் நிறைய…
வரலாற்றுப்பக்கங்களில் எனது பெயரும் என்றும் பதிந்திருக்கும் எனும் நம்பிக்கையோடு…
பிரியமுடன்…
பிரியன்…
- JoinedJuly 2008
- Websitehttp://piriyan.wordpress.com
Testimonials
Nothing to show.